by admin on | 2026-11-12 11:29 AM
*கேள்வி-பதில்*
*-- ஆர். வி. ஆர்*
[முந்தைய கேள்வி-பதில் பகுதிகளை இங்கு தட்டிப் படிக்கலாம் --> https://rvr-india.blogspot.com]
*1. கேள்வி:* "டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்" என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான விக்னேஷ் தெரிவிக்கிறாரே?
*பதில்:* வெட்கப்பட வேண்டிய காரியம் என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து செய்தால், அமைச்சர் உணர்ந்த வெட்கம் ஒரு வெட்கமா? நிதானம் இல்லாத பேச்சு.
*****
*2. கேள்வி:* "முதல்வர் விஜய்க்குப் பிடித்த வரிகள், 'காவியத் தமிழைக் கம்பன் தந்தான், கவிதைத் தமிழை இளங்கோ தந்தான், வாழ்வியல் தமிழை வள்ளுவன் தந்தான்' என்பது. வள்ளுவனின் குறளில் காணப்படும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதுதான் உன் வழிகாட்டி வாசகம் என்பதை என் வெற்றித் தலைவன் தான் எங்கள் எல்லோருக்கும் சொல்லித் தந்தார்" அன்று அண்மையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருக்கிறாரே?
*பதில்:* வள்ளுவர் சொன்ன குறளிலிருந்து சில சொற்களை விஜய் சொன்னது, விஜய்க்குப் பெருமையா? விஜய் திருப்பிச் சொன்னதை பாலிமர் டிவி, தந்தி டிவி, புதிய தலைமுறை என்று நிறைய டிவி சேனல்கள் ஒளி பரப்பின, பத்திரிகைகளும் பிரசுரித்தன. அப்படியானால் மொத்த மீடியாவுக்கும் வள்ளுவரின் பெருமையில் பங்கு உண்டா? வள்ளுவர் பெருமையைப் பங்கு போட்ட ராஜ்மோகனுக்கும் ஒரு பங்கு இருக்குமா?
*****
*3. கேள்வி:* நவ. 11ம் தேதி, மாமல்லபுரத்தில் தவெக எம்.எல்.ஏ-க்களுடனான சந்திப்பின் போது, "நீங்கள் அனைவரும் மக்கள் சேவையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். கவனத்துடனும் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்" என்று விஜய் தனது எம்.எல்.ஏ-க்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுரை வழங்கியிருக்கிறாரே?
*பதில்:* சில தவெக எம்.எல்.ஏ-க்கள் கண்ணியம் குறைவாக நடந்துகொண்டனர் என்று நம்பத் தகுந்த புகார்கள் வந்தால் தவிர, முதல்வர் இந்த அறிவுரையை வழங்கியிருக்க மாட்டார். அறிவுரையை அவர் கொடுத்த வரை சரி. ஆனால் ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது.
விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பாதிக் காரணம், ஒரு திராவிடக் கட்சி அவரை அஞ்சி, அவருக்குத் தொல்லை கொடுத்து அவரைக் கடுப்படித்தது. ஆனால், சினிமாவில் நியாயத்திற்காகப் போராடும் பாத்திரத்தில் ஸ்கிரிப்ட் காட்டியபடி நடித்து சாதாரண மக்களின் அபிமானத்தையும் தேர்தலில் அவர்களுடைய வாக்குகளையும் பெறுவது வேறு; ஒழுங்கான, முறைகேடுகளில் நாட்டமில்லாத, கண்ணியம் மிக்க நபர்களை அதிகமாகத் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களாகப் பெற்று, ஆட்சியைத் திறமையாக நடத்துவது வேறு.
ஒரு முதல்வராக, விஜய் கண்ணியமாக நடந்துகொள்கிறார். இதுவரை லஞ்ச ஊழலில் அவர் ஈடுபடாதவராகத் தான் தெரிகிறது. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரது கைகள் சுத்தமாக (அதாவது: வாங்காத கைகள், அரசு சேவைகள் கேட்டு வந்த நபரை அடிக்காத கைகள், கண்ணியமற்ற வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பாத கைவிரல்கள் கொண்டவர்களாக) இருக்கவேண்டும் என்றால், மற்றபடி பேச்சிலும் செயலிலும் அவர்கள் கண்ணியமாகச் செயல்படவேண்டும் என்றால், அவர்களின் தலைவன் அந்த குணங்களுக்காகப் பேர் பெற்று, அதன் காரணமாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும். விஜய் அந்த வழியில் உருவான தலைவர் அல்ல. அவர் தனது சினிமா பிரபலத்தால் தலைவர் ஆனவர்.
திராவிடக் கட்சிகளின் நிர்வாக மட்டத்தில் உள்ள கூட்ட நெரிசலால் அங்கு இடம் பிடிக்க முடியாமல் போன திராவிட டைப் அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள்? வெற்றிடம் அதிகம் உள்ள புதுக்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு அவர்கள் வந்து சேருவார்கள். ஆகையால் அவர்களிடம் அரசியல் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை யாரும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. விஜய்யும் ஓரளவுக்கு மேல் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அமைச்சரவையில் உள்ளவர்களை மட்டும் விஜய் பெரிதாகக் கட்டுப்படுத்தலாம், அவ்வளவுதான்.
'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' எனும் கோட்பாட்டை இனி தவெக-வும் ஏற்கலாம். நடைமுறையில் அம்சமாகப் பொருந்தும்.
*****
*4. கேள்வி:* "ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளின் தலைவர்களுக்கு சூரியன் உதித்தால் போதும், விஜய் ஆட்சியை அட்டாக் செய்யவில்லை என்றால் காலை உணவு இறங்காது" என்று மதிமுக தலைவர் வைகோ பேசி இருக்கிறாரே?
*பதில்:* ஒரு ஆளும் கட்சி அமைத்த கூட்டணியில் இருந்தால், ஆட்சியாளர்கள் செய்யும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் பற்றி அறிந்தும் அந்தக் கூட்டணியை ஆதரித்து முழங்கிப் பேசி, அடுத்த தேர்தலில் அந்த ஆளும் கட்சி தோற்றபின் புதிதாக வந்த ஆளும் கட்சி அணிக்குத் தாவி, முந்தைய ஆளும் கட்சியின் ஊழல் பற்றிப் பேசுவது வைகோ பாணி.
ஒரு ஆளும் கட்சிக் கூட்டணியில் இருந்தவாறு அவ்வப்போது அந்த ஆட்சியை மெலிதாகக் குறை சொல்லி, என்ன காரணத்தினாலும் எப்போது ஆட்சி மாற்றம் வந்தாலும் பதவியேற்கும் புதிய ஆளும் அணிக்கு லாவகமாகத் தாவி ஆதாயம் பெறுவது கம்யூனிஸ்டுகள் மற்றும் திருமாவளவன் பாணி.
இரண்டு வித அரசியல் தலைவர்கள் செல்லும் வழி வேறு. 'ஆளும் கட்சியை ஆதரித்து ஆதாயம் பெறுதல்' என்ற அவர்களுடைய இலக்கு ஒன்றே.
*****
*5. கேள்வி:* பொது நூலகங்களுக்காக, போலியான தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமல்ல, போலியான ஆங்கிலப் புத்தகங்களையும் சென்ற திமுக அரசு கொள்முதல் செய்ததாகச் செய்தி வந்திருக்கிறதே?
*பதில்:* இருமொழிக் கொள்கை.
*****
பகுதி 154
11.11.2026
--------
R. Veera Raghavan
Advocate, Chennai
Email: veera.rvr@gmail.com
Blog: https://rvr-india.blogspot.com
டாஸ்மாக் கடையில் மது விற்பனை அதிகரித்திருப்பது குறித்து ஆர்.வி.ஆர் கேள்வி பதில்கள்....!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விவாதம் செய்வோம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்...!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!
மகளின் இறப்பு - மறையாத வடு ! குற்றவாளிக்கு ஜாமீன் - பழிவாங்கிய தந்தை !!
காதலன் உயிரிழந்த சோகம் கல்லூரி மாணவி உயிரிழப்பு....!!!
"இன்ஸ்டா" ஆண் நண்பருடன் வீட்டிலேயே உல்லாசம் ! மனைவி கொலை - ஆத்திரத்தில் கணவன் வெறி செயல் !!