| | | | | | | | | | | | | | | | | | |
சினிமா General

ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!

by Vignesh Perumal on | 2026-03-09 03:17 PM

Share:


ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று (09.03.2026) நடைபெறவிருந்த தணிக்கை மறு ஆய்வுக் குழுவின் திரையிடல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழுவினர் இன்று மதியம் 2 மணிக்கு 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்து இறுதி முடிவெடுக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இந்தத் திரையிடல் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. புதிய தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், ராணுவ இலச்சினைகளை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகவும் எழுந்த புகாரால் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தனது வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு மூலமாகச் சான்றிதழ் பெற முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாகவே இன்றைய ஆய்வு நடைபெறவிருந்தது.

விஜய் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக வெளியாகும் கடைசிப் படம் என்பதால், 'ஜனநாயகன்' மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு (ஏப்ரல் 2026) முன்னதாக இந்தப் படம் வெளியாகுமா அல்லது ஜூன் மாதத்திற்குத் தள்ளிப்போகுமா என்ற குழப்பம் நீடிக்கிறது. இன்றைய ஒத்திவைப்பு விஜய் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையில், பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment