by Vignesh Perumal on | 2026-03-19 02:24 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி - கொடைக்கானல் மலைப்பாதையில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை ஒன்று அடிக்கடி சாலையில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உயிருக்கு அஞ்சி வாகனங்களை நிறுத்திச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் முக்கிய மலைப்பாதையில் தேக்கந்தோட்டம் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பாதையில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே, கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடர்ந்த காட்டிற்குள் இருந்து வெளியேறும் ஒற்றை யானை, சாலையிலேயே நீண்ட நேரம் சுதந்திரமாக உலா வருகிறது.
யானை சாலையின் குறுக்கே நிற்பதாலும், ஆக்ரோஷமாக உலவுவதாலும் அந்த வழியாக வரும் லாரிகள், வேன்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் மலைப்பாதையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், திடீரென யானை சாலையின் குறுக்கே வருவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் யானையைக் கண்டு அலறியடித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. யானை வாகனங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் பயணிகள் விடிய விடிய சாலையிலேயே காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். "தேக்கந்தோட்டம் சோதனைச் சாவடி அருகே யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். யானையை மீண்டும் அடர்ந்த காட்டிற்குள் விரட்டத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்," என வலியுறுத்தியுள்ளனர்.
மலைப்பாதையில் யானை நடமாட்டம் குறித்த எச்சரிக்கை பலகைகளை வைக்கவும், இரவு நேரப் பயணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!