| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

மேகமலையில் 98 கிராம மக்களை வெளியேற்றும் விவகாரம் - தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் !

by satheesh on | 2026-09-30 03:09 PM

Share:


மேகமலையில் 98 கிராம மக்களை வெளியேற்றும் விவகாரம் - தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் !

டெல்லி;மேகமலை மற்றும் மாஞ்சோலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கின் மீது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்..!

மாஞ்சோலை, மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு மற்றும் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரக்கோரி ஜான் கென்னடி என்பவர் தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நடைபெற்றது..

நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

காலையில் நடைபெற்ற விசாரணையின்போது, மதுரை-கொல்லம் நெடுஞ்சாலை திட்டத்துக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என தெரிந்தும் அங்கு நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும், நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை உருவாகி வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ளதைப் போன்று உயர்மட்ட சாலை அமைப்பது அல்லது திட்டத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.* பின்னர் பிற்பகல் விசாரணை மீண்டும் தொடங்கியபோது, தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை இலவம் பஞ்சு தோட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.* தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மேகமலையின் பல பகுதிகள் முன்பு வனமாக இல்லை என்றும், தற்போது அவை ரிசர்வ் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு, வனம் என அறிவிக்கப்பட்டால் அது வனம்தான் என்றும், அதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர். வனப்பகுதியில் இலவம் பஞ்சு தோட்டம் அமைப்பதை அரசு ஏன் ஊக்குவிக்கிறது என்றும், இலவம் பஞ்சு தோட்டங்களால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு, இலவம் பஞ்சு தோட்டங்களை அமைத்துள்ளவர்கள் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள்தான் என்றும், வெளி ஆட்கள் யாரும் தோட்டங்கள் அமைக்கவில்லை என்றும் தெரிவித்தது.* மேலும், சமீபத்தில் யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை என்றும், 1982-ம் ஆண்டிலேயே பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், பட்டா வைத்திருப்பவர்களின் நிலத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், பட்டா இல்லாமல் ஆக்கிரமித்து நிலத்தை வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உரிய பட்டா மற்றும் அனுமதி இல்லாதவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பரமேஸ்வர், மேகமலை கடந்த 1978-ம் ஆண்டிலேயே ரிசர்வ் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டதாகவும், அங்கு தற்போது வசிப்பவர்களில் பலர் ஆக்கிரமிப்பாளர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மேகமலையில் இலவம் பஞ்சு தோட்டங்களை அமைக்க ஊக்குவித்தது அரசுதான் என்பதால், அங்கு பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பும் அரசுக்கே உள்ளது என்றும் அவர் கூறினார். வன உரிமைச் சட்டத்தின் கீழ் இலவம் பஞ்சு தோட்டம் அமைத்துள்ளவர்கள் நில உரிமை கோர அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு தமிழக அரசு, வன உரிமைச் சட்டம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் என்றும், பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அந்தச் சட்டத்தின் கீழ் உரிமை கோர முடியாது என எவ்வாறு கூற முடியும் என்றும் வாதிட்டது. இதற்கு பதிலளித்த நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞர், உண்மையாக வனத்தை நம்பி வாழும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றாலும், மேகமலை சுற்றுவட்டாரத்தில் இலவம் பஞ்சு தோட்டம் அமைக்க அரசே ஊக்குவித்த பின்னரே அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதாகவும், எனவே ஆக்கிரமிப்பாளர்கள் நில உரிமை கோர அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, இலவம் பஞ்சு தோட்டம் அமைப்பதற்காக வெளியில் இருந்து வந்தவர்கள் எந்த வகையிலும் அப்பகுதியை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மாஞ்சோலை, மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment