by admin on | 2026-07-14 02:28 PM
‘‘தனக்கு அரசியல் தெரியாது என்பது விஜய்க்கு தெரியும்’’
ஒரு விறுப்பு வெறுப்பற்ற ஆய்வு... கட்டுரை...!
-மா.பாண்டியராஜ்.
‘‘தனக்கு அரசியல் தெரியாது என்பது விஜய்க்கு நன்கு தெரியும். சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு, அரசியல் களம் என்பது வேறு என்பதையும் விஜய் தெளிவாகவே உணர்ந்திருந்தார். ஆனால் தனது சினிமா பிம்பத்தை எப்படி அரசியலாக்கலாம் என்ற விஷயத்தில் மிகப்பெரிய நிபுணத்துவம் பெற்றவர் விஜய்.....!
ஆமாம்... தனது பலம் மற்றும் பலகீனங்களை விஜய் மிகவும் தெளிவாக உணர்ந்திருக்கிறார். தனக்கு அரசியல் தெரியவே தெரியாது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்ந்திருக்கிறார். ஆனால் நடிப்பில் தனது அபார ஆற்றலையும் அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறார். மிகவும் சாதாரணமான ஒரு வார்த்தையை கூட ‘‘விஷம் தடவிய அம்பு போல்’’ வீசத்தெரிந்தவர் விஜய்.
தனது சினிமா மாடுலேசன், நடிப்பாற்றல், எந்த வார்த்தையை எப்படி மக்களை நோக்கி வீச வேண்டும் என்பதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர் விஜய். சினிமா கதாநாயகனுக்கு உரிய உடல்வாகு அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கிறது.
இதனால் ஜென்ஸி தலைமுறை மட்டுமின்றி, அந்த தலைமுறையை பெற்றெடுத்தவர்களும் சினிமா மாயையில் வீழ்ந்து கிடக்கின்றனர். விஜய் கரூரில் மதியம் 12 பேசப்போகும் மீட்டிங்கிற்காக காலை 6 மணி முதல் அங்கு கூடியிருந்த ஜென்ஸி தலைமுறையை பெற்றெடுத்த பெண்களின் கூட்டமே இதற்கு சான்று. அதுவும் இளம் பெண்கள் மட்டுமின்றி, அவர்களை பெற்றெடுத்த பெண்களும், மீட்டிங் அரங்கிற்குள் ஓடுவதை பார்த்த போது, வயிறு பற்றி எரிந்தது. (குளிர்ந்த நீர் குடித்து எரிச்சலை தணித்துக் கொண்டோம். வேறு என்ன செய்ய முடியும்.)
இப்படி மக்களை பற்றியும், மக்கள் மனநிலையை பற்றியும், தனது சினிமா ஆற்றலை பற்றியும், தனக்கு தெரியாத விஷயங்களை பற்றியும் விஜய் தெள்ளத்தெளிவாக உணர்ந்திருந்தார். ஆட்சி நிர்வாகத்திலும், மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் திராவிட கட்சிகள் மிகப்பெரிய கில்லாடிகள். அபார திறமை ஆற்றல் நிறைந்தவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வராக இருந்த ஸ்டாலின் கொண்டு வந்த நலத்திட்டங்கள் அனைத்தையும் இன்னும் நுாறு ஆண்டுகளுக்கு தமிழகம் மறக்காது. பல நுாறை தண்டி, பல ஆயிரத்தை தாண்டி, பல லட்சம் பேர் பலன் பெரும் பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் ஸ்டாலின். மாநில உள்கட்டமைப்பு துறையிலும், ஸ்டாலின் தலைமையிலான அரசு அளப்பறிய சாதனைகளை செய்ததையும் மறந்து விடக்கூடாது. அந்த அளவுக்கு மக்களுக்காக ஓடி, ஓடி உழைத்தவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின்.
‘‘மக்களுக்காக உழைத்த இந்த மனுஷனை தோற்கடித்து விட்டோமே… இது மிகப்பெரிய பாவம்…’’ என தமிழக மக்கள் இப்போது யோசிக்க தொடங்கி இருப்பதும், தங்களுக்கும் பேசத்தொடங்கி இருப்பதும் மறுக்கவே முடியாத உண்மை.
ஆனால்... ஆனால்... என்ன அடுத்து சொல்லப்போவது தான் உண்மை...
அதாவது திராவிட கட்சிகளின் மிகப்பெரிய பலகீனம் ஊழல்... ஊழல்... ஊழல்... அதிமுகவோ, திமுகவோ இவ்வளவு பெரிய ஊழல் செய்து விட்டனர் என்று செய்யாத ஒரு ஊழலை பற்றி சொன்னால் கூட, உடனே மக்கள் நம்பும் அளவுக்கு இரு திராவிட கட்சிகளும் ஊழல் சாக்கடையில் குளித்து, மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
தலைவிரித்தாடும் ஊழல் மற்றும் இதற்கு எதிரான மக்களின் மனநிலை தான் விஜய்யின் அரசியல் முதலீடு. இதனால் தான் ஊழல் ஒழிந்தால் போதும் என்ற எண்ணத்தில் மக்கள் பணம், ஜாதி, மதம், வேட்பாளர் பெயர் கூட தெரியாமல் விசிலுக்கு ஓட்டளித்து குவித்து விட்டனர். தேர்தல் முடிவுகளே எப்படி துல்லியமாக மக்களை விஜய் கணித்திருக்கிறார் என்பதை காட்டி விட்டன. இது தான் விஜய்யின் முதல் பிளஸ் பாயிண்ட்.
அடுத்ததை பார்ப்போம்... இருபது ஆண்டுகளுக்கு முன்பே தி.மு.க., ஒரு தீய சக்தி என்று ஜெயலலிதா விமர்சித்து வந்தார். அப்போது ஜெயலலிதா சொல்லிக்கூட தீயசக்தி பிரச்சாரம் பெரிய அளவில் எடுபடவில்லை. இன்று அதே வார்த்தையை விஜய் மக்களை நோக்கி வீசும் போது, மக்கள் கை தட்டி ஆர்ப்பரித்து வரவேற்கின்றனர். இது தான் விஜய்யின் இரண்டாவது பிளஸ் பாயிண்ட்.
சினிமா போல் நிஜ வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்த விஜய், தன் நிஜ வாழ்க்கைக்கு யார், யார் தனக்கு தேவை என்று தேர்ந்தெடுத்ததிலும் மிகவும் தெளிவாக இருந்தார். அதற்கு காலமும், நேரமும், விதியும் அவருக்கு ஒத்துழைத்தது. அதாவது மிகவும் நல்ல நண்பர்களும், மிகவும் தெளிவான ஆலோசகர்களும், வழிகாட்டிகளும் விஜய்க்கு அமைந்தது இறைவன் கொடுத்த வரம்.
அதாவது தனது அரசியல் ஆலோசகர், அரசு நிர்வாக ஆலோசகர்கள், ஸ்கிரிப்ட் ரைட்டர்கள், அமைச்சர்கள் என தனக்கு தேவையான அத்தனை இடங்களில் மிகவும் நம்பகமான திறமையும், சாதுர்யமும் மிகுந்த ஆட்களை நியமித்து விட்டார். அதாவது ஓரு ஆட்சியை தெள்ளத்தெளிவாக நடத்தும் அளவுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய மிகப்பெரிய வலுவான நண்பர்களை விஜய் தன் கை வசம் வைத்துக் கொண்டார்.
முதல்வர் பதவிக்குரிய அழுத்தத்தை தாங்க முடியாமல் விஜய் ஓடிவிடுவார் என்று அத்தனை பேரும் பதறிக்கொண்டிருந்த நிலையில், அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில், மிகவும் ஜாலியாக அரசை நடத்திச் செல்கிறார். அந்த அளவு துல்லியமான திட்டமிடல்கள், அதற்கு வழிகாட்டும் நபர்கள் விஜய்யிடம் இருக்கின்றனர்.
அதுவும் அவர் முதலில் ஊழலை ஒழிப்பேன் என்று படையெடுத்திருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதாவது விஜய் வேண்டாம் என நினைக்கும் எதிராளிகள் கூட ஊழலை ஒழிக்கும் வரை விஜய் இருக்கட்டும் என சொல்லும் நிலைக்கு வந்து விட்டனர். அந்த அளவுக்கு திராவிட கட்சிகள் தமிழகத்தினை ஊழல் சாக்கடையில் நிரப்பியிருக்கின்றனர். அதேபோல் விஜய்யின் மூன்று மாத ஆட்சியில், குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஒரு சமூக நலத்திட்டம் கூட செயல்படவில்லை. விஜய் ஆட்சியில் சில சிறு, சிறு குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஊழலை ஒழிப்பேன் என்ற விஜய்யின் ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்பட்டு தமிழக மக்கள் விஜய்யிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை வளர்த்து கவனித்துக் கொண்டுள்ளனர்.
அதேபோல் சிங்கப்பெண் படை நிறுவியது, அவர்களுக்கு மிகவும் அழகான யூனிபார்ம் வழங்கியது எல்லாமே சினிமாத்தனமாக இருந்தாலும், மக்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படி மக்களின் நாடித்துடிப்பினை அறிந்து விஜய் செயல்படுவது அவரது வெற்றியின் இன்னொரு சிறப்பு அம்சம்.
இதனால் தான் விஜய் பணமா... ஜனமா என்றால்... எனக்கு ஜனம் தான் முக்கியம் என்பேன். நீங்கள் இருக்கையில் எனக்கென்ன கவலை என்ற ரீதியில் மிகவும் தைரியமாக சில முடிவுகளை எடுக்கிறார். தனது ஜோசியருக்கு அரசு ஆலோசகர் பதவி வழங்கியதும், அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் பின்வாங்கியதும் அற்புதமான அரசியல் நாடகம். அதே சமயம், ஒரு விஷயத்தில் பின்வாங்குவது போல் நடந்து கொண்ட விஜய், தனது சினிமாத்துறை நண்பரை தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்ததும், தன்னை அதாவது கவனிங்க... தான் ஒரு நடிகராக இருந்த போது, தன்னை பார்க்க வந்து அப்போது ஏற்பட்ட நெரிசல் களேபரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு பணி வழங்கியது, ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தது போன்றவைகள் எல்லாம் திராவிட கட்சிகள் கூட எடுக்க தயங்கும் மிகவும் கடினமான முடிவுகள். இப்படி கடினமான முடிவுகள் எடுத்தாலும், அதனை எப்படி கையாள்வது, வெற்றி பெறுவது என்பதை சொல்லித்தர விஜய்க்கு ஆட்கள் உள்ளனர்.
ஆக தான் யாரையெல்லாம் எதிர்த்து களத்தில் நிற்கிறோம் என்பதை விஜய் தெள்ளத்தெளிவாக உணர்ந்தே அரசியல் செய்கிறார். ஆனால் ஒரு விஷயம் தெளிவான உண்மை. விஜய்யின் சினமாத்தனம் இப்போதைய ஜென்ஸி தலைமுறைக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. பெரும்பாலான பெண்களும் விஜய்யின் சினிமா ஸ்டைல் ஆட்சியை விரும்புகின்றனர். இது ரொம்ப நாள் நீடிக்காது. மிகவும் ஹிட் அடித்த விஜய்யின் சினிமா படங்களை கூட திரும்ப, திரும்ப பார்க்க மக்கள் விரும்புவதில்லை. சினிமாத்தனம் ஒருமுறை அல்லது இருமுறை மிகவும் நீண்ட காலம் இழுத்தாலும் மூன்று முறை கூட எடுபடும். ஆனால் எப்போதும் சினிமாத்தனம் எடுபடாது. விஜய் சினிமாத்தனத்தில் இருந்து விடுபட்டு, இயல்பான அரசியல் சூழலுக்கு திரும்ப வேண்டும்.
ஊழலை ஒழித்து மக்களுக்கு நல்ல சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சினிமாத்தனம் இல்லாத மிகவும் சிறந்த ஆட்சியை தர வேண்டும். அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட அரசியலை துாக்கி எறிந்த மக்களுக்கு சினிமா அரசியலை துாக்கி எறிய ரொம்ப நாள் ஆகாது என்பது விஜய் எந்த நிலையிலும் மறந்து விடக்கூடாது. சொன்னபடி நடங்கள் விஜய்…. இல்லாவிட்டால்…. தற்போதைய திராவிட கட்சிகளின் நிலை தான் உங்களுக்கும்…..!
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!