| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

யாரும் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர்கள்...! தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்..! பரபரப்பு...!

by Vignesh Perumal on | 2026-04-17 03:03 PM

Share:


யாரும் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர்கள்...! தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்..! பரபரப்பு...!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் கட்சியினர் வரத் தடை விதித்து பொதுமக்கள் பிளக்ஸ் போர்டு வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வேளையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேற்குப் பகுதியில் மக்கள் அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து இந்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். தங்கள் பகுதியில் முறையான கழிப்பிட வசதி, சாலை வசதி மற்றும் மின்கம்பங்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.

அப்பகுதி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியும், அவர்கள் பயிற்சி பெற முறையான விளையாட்டு மைதான வசதி இல்லை.

நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியின் நுழைவாயிலில் பொதுமக்கள் ஒரு பெரிய பிளக்ஸ் போர்டை வைத்துள்ளனர். அதில், "தயவு செய்து யாரும் எங்கள் தெருவிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு உள்ளே வர வேண்டாம். எங்கள் கோரிக்கைகளை ஏற்றுத் தரும் வரை தேர்தலைப் புறக்கணிப்போம்" என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அந்தப் பலகையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் "பிறந்த சமூகத்தின் விடுதலைக்காகப் போராடவில்லை எனில் அந்தச் சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்" என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்துள்ளனர்.

வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களுக்குத் தடை விதித்துள்ளதோடு, தேர்தலையே புறக்கணிக்கப் போவதாக மக்கள் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்று அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவார்களா அல்லது அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டு சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.




நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment