| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

அதிமுகவின் "செக்" மாதிரி பிரச்சாரம்...! பறக்கும் படை வீடுவீடாக விசாரணை..!

by Vignesh Perumal on | 2026-04-17 02:42 PM

Share:


அதிமுகவின் "செக்" மாதிரி பிரச்சாரம்...! பறக்கும் படை வீடுவீடாக விசாரணை..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு பகுதிகளில், அதிமுகவினர் வங்கி காசோலை போன்ற மாதிரிகளை பொதுமக்களுக்கு விநியோகித்து வாக்கு சேகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.  

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நிலக்கோட்டை (தனி) தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் விநியோகித்த ஒரு வித்தியாசமான துண்டுப் பிரசுரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வழங்கிய அந்த மாதிரிக் காசோலைகளில், பார்ப்பதற்கு அசல் வங்கி காசோலை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு காசோலை ரூ.10,000-க்கும், மற்றொரு காசோலை ரூ.2,000-க்கும் அச்சிடப்பட்டுள்ளது.

"தமிழ் குடும்பங்கள் அனைவருக்கும்" எனப் பெயர் குறிப்பிடப்பட்டு, 02/06/2026 எனத் தேதியிடப்பட்டுள்ளது. "அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும்" என்ற வாசகத்துடன் முத்திரை குத்தப்பட்டுள்ளது.

இதில் இரட்டை இலை சின்னம் மற்றும் "அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசோலையின் பின்புறம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களுடன், "நல்லாட்சினா எடப்பாடி தான், வாக்களிப்பீர் இரட்டை இலை" என அச்சிடப்பட்டுள்ளது.

வங்கி காசோலை வடிவில் பண வாக்குறுதி அளிப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது எனப் புகார் எழுந்ததை அடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உடனடியாகக் களத்தில் இறங்கினர். நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குச் சென்ற அதிகாரிகள், பொதுமக்களிடம் அந்த மாதிரிக் காசோலைகளைப் பெற்றனரா என விசாரணை நடத்தினர்.


இந்த டோக்கன் அல்லது செக் மாதிரிகளை வழங்கியது யார்? எப்போது வழங்கப்பட்டது? இதைக் கொடுக்கும்போது என்ன கூறினார்கள்? போன்ற கேள்விகளைப் பொதுமக்களிடம் கேட்டு அதிகாரிகள் பதிவு செய்தனர். விநியோகிக்கப்பட்ட அந்த மாதிரிக் காசோலைகளை ஆதாரங்களாக அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

வாக்காளர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பதைப் போன்ற ஒரு மாயையை இந்தச் செக் மாதிரிகள் ஏற்படுத்துவதாகப் போட்டியிடும் இதர கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையான புகார் அளிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். 

ஏற்கனவே தேர்தல் பறக்கும் படையினர் திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த "மாதிரி செக்" விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.






நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment