by Vignesh Perumal on | 2026-04-02 02:17 PM
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் வேளையில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகள் மற்றும் நிலைக்கண்காணிப்புக் குழுவினர் (SST) மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஐ.பெரியசாமியின் வாகனம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலை, தோமையார்புரம் பகுதி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரான அமைச்சர் ஐ.பெரியசாமி, தனது தொகுதியில் திட்டமிட்டிருந்த தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடித்துவிட்டு, திண்டுக்கல் நோக்கித் தனது காரில் வந்து கொண்டிருந்தார். தோமையார்புரம் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிகச் சோதனைச் சாவடியில், தேர்தல் நிலைக்கண்காணிப்புக் குழுவினர் அமைச்சரின் காரை மறித்து நிறுத்தினர். அதிகாரிகள் காரின் உள்பகுதி மற்றும் உடைமைகளைத் தீவிரமாகச் சோதனை செய்தனர்.
சோதனையின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி காரிலிருந்து இறங்கி, அதிகாரிகளின் பணிக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார். சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில், கணக்கில் வராத பணம் அல்லது பரிசுப் பொருட்கள் எனச் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. சோதனை முடிந்ததையடுத்து, அதிகாரிகள் அனுமதி அளித்த பின் அமைச்சரின் கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே முக்கியத் தலைவர்களின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வேடசந்தூர் மற்றும் கொடைரோடு பகுதிகளில் இவரது வாகனம் சோதனையிடப்பட்டது. மேலும் பழனி தொகுதி மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளின் வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கப் பணத்தைத் தேர்தல் ஆணையம் இதுவரை பறிமுதல் செய்துள்ளது.
"தேர்தல் நடத்தை விதிகளின்படி, அமைச்சர்கள் அல்லது விஐபி-க்கள் எனப் பாகுபாடின்றி அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் நேர்மையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!