by Vignesh Perumal on | 2026-03-17 02:59 PM
பழைய கொலை வழக்கில் சரியாகச் சாட்சி சொல்லாததால் எதிரிகள் விடுதலையானது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இரண்டு பேரைத் திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (29). நத்தம் ரோடு அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிரி. இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிலம்பரசன் மற்றும் கிரி ஆகிய இருவரும் சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது இவர்கள் இருவரும் சரியாகச் சாட்சி சொல்லாத காரணத்தால், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் அனைவரும் விடுதலையாகி உள்ளனர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், அனுமந்தநகர் பகுதியில் சிலம்பரசனும் கிரியும் மீண்டும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அப்போது பழைய சாட்சி விவகாரத்தை முன்வைத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாகப் பேசி, கையாலும் அருகில் இருந்த கட்டையாலும் தாக்கிக் கொண்டனர். மேலும், ஒருவருக்கொருவர் கொலை மிரட்டலும் விடுத்துக் கொண்டனர்.
இந்த மோதல் குறித்துத் தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் மோதலில் ஈடுபட்ட கிரி மற்றும் சிலம்பரசன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக முயன்ற இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களைத் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். பழைய கொலை வழக்கு விவகாரத்தால் மீண்டும் ஒரு மோதல் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!