by Vignesh Perumal on | 2026-02-14 01:35 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் பொது அறிவிப்பு ஒலிபெருக்கியில், நடிகர் விஜய் நடித்த திரைப்படப் பாடலை ஒலிக்கச் செய்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், உலகப்புகழ் பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களுக்குத் தேவையான தகவல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அறிவிக்க, கோயில் நிர்வாகம் சார்பில் மலைப்பாதை, கிரிவலப் பாதை மற்றும் அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
சம்பவத்தன்று மலைக்கோயில் படிப்பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு நபர், அங்கிருந்த ஒலிபெருக்கி அமைப்பில் தனது கைப்பேசியை சட்டவிரோதமாக இணைத்துள்ளார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடித்த திரைப்படப் பாடலை அந்த ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்துள்ளார்.
இதை மற்றுமொரு கைப்பேசி மூலம் வீடியோவாகப் பதிவு செய்த அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவிட்டுள்ளார்.
புனிதமான ஆன்மீகத் தலத்தில், பக்தர்களுக்கான தகவல் தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்தி சினிமா பாடலை ஒலிக்கச் செய்தது அங்கிருந்த மற்ற பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளானது.
இது குறித்து கோயில் நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மத உணர்வுகளைப் புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இணைய குற்றப்பிரிவு போலீஸாரின் உதவியுடன், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாதனங்களைச் சேதப்படுத்துவதோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!