by Vignesh Perumal on | 2025-12-29 07:58 PM
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, இன்று காலை திருச்சி சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள NGO காலனி உழவர் சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகச் சீரான குடிநீர் விநியோகம் இல்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்துப் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்கள், இன்று காலை காலி குடங்களுடன் வீதிக்கு வந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது காலி குடங்களுடன் திருச்சி சாலையில், உழவர் சந்தை அருகே திரண்டனர். திடீரென அவர்கள் சாலையின் குறுக்கே குடங்களை வரிசையாக அடுக்கி வைத்து, தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் பிரதான சாலை என்பதால், மறியல் காரணமாக இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.மறியல் குறித்துத் தகவல் அறிந்தவுடன் புறநகர் டிஎஸ்பி சங்கர், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்."அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை" என்று பெண்கள் தங்கள் குமுறல்களைத் தெரிவித்தனர்.அதற்குப் பதிலளித்த போலீசார், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும், சீரான விநியோகத்திற்கு வழிவகை செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
போலீசாரின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட பெண்கள், சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சாலை மறியலைக் கைவிட்டனர். அதன்பின்னர் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வாகனங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின. இருப்பினும், "உடனடியாகக் குடிநீர் வழங்காவிட்டால் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" எனப் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!