| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!

by Vignesh Perumal on | 2026-07-22 12:08 PM

Share:


திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!

திண்டுக்கல் அருகே புனித மரிய மதலேனால் தேவாலயத் திருவிழா வானவேடிக்கையின் போது ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டி பகுதியில் புகழ் பெற்ற புனித மரிய மதலேனால் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் ஆண்டுத் திருவிழா கடந்த சில நாட்களாக விமரிசையாக நடைபெற்றுவந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வை முன்னிட்டு, இரவில் வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வானவேடிக்கையைக் காண்பதற்காகத் தேவாலய வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கிராம மக்களும், பக்தர்களும் திரண்டிருந்தனர்.

வானவேடிக்கை வான்நோக்கிச் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வெடி பொருட்கள் தவறுதலாகக் கீழே விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் வெடிகள் கூட்டத்தை நோக்கிச் சிதறியதால், அங்கிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர்.

இந்தத் திடீர் விபத்தில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உடல் பொசுங்கி காயம் அடைந்தனர்.

விபத்து நடந்தவுடனேயே அங்கிருந்தவர்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டுத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் விபத்து குறித்து பல கோணங்களில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகிழ்ச்சியாக நடைபெற்று வந்த திருவிழாவில் நேரிட்ட இந்த வெடி விபத்து அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment